சிம்புவின் பாராட்டு குறித்து நெகிழ்ந்த இயக்குனர் மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது.;

Update:2025-11-01 19:21 IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரூ.30 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.‘பைசன்’ படம் கடந்த 17ம் தேதி வெளியானது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், உலகளவில் ரூ.60 கோடி வசூலை கடந்திருக்கிறது. ‘பைசன்’ படத்தைப் பார்த்துவிட்டு முதல்-அமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பலரும் மாரி செல்வராஜை பாராட்டி இருந்தனர். ‘பைசன்’ படத்தை பார்த்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாரி செல்வராஜ்க்கு ‘இயக்குநர் திலகம்’ என்ற புதிய பட்டத்தை வழங்கியுள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், “சிம்பு சார் என்னை தொலைபேசியில் அழைத்தார். அவர் சொன்ன விஷயம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் தொடர்ந்து வேலை செய்ய வேலை செய்ய நம்மை அறியாமலேயே அற்புதத்தை நிகழ்த்தக்கூடிய ஒரு ஆளாக நாம் மாறிவிடுவோம். நாம என்ன செய்தாலும் அது அற்புதத்தை நோக்கி நகர தொடங்கும். அப்படி ஒரு அற்புதம் பைசன் படத்தில் நிகழ்ந்து இருப்பதாக தான் நம்புவதாக சொன்னார்” என்று மாரி செல்வராஜ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்