நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு மோகன்லால் இரங்கல்
ஸ்ரீனிவாசனின் மந்திர எழுத்தால் நாங்கள் இணைந்து நடித்த கதாபாத்திரங்கள் காலமின்றி நிற்கின்றன என்று மோகன்லால் கூறியுள்ளார்.;
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 69). கடந்த 48 ஆண்டுகளாக மலையாள திரையுலகில் முன்னணி கலைஞராக திகழ்ந்தவர். இயக்குனராகவும், நடிகராகவும் அறியப்பட்ட ஸ்ரீனிவாசன், திரைக்கதை ஆசிரியராகவும் செயலாற்றி வந்தவர். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் மூலம் தனி முத்திரை பதித்த இவர், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பெற்ற வந்த நடிகர் ஸ்ரீனிவாசன் இன்று காலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீனிவாசனின் நெருங்கிய நண்பரும் நடிகருமாக மோகன்லால் பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பிரியாவிடை சொல்லாமலே ஸ்ரீனி கிளம்பிவிட்டார். அவருடனான பிணைப்பை வார்த்தைகளால் விவரிக்கத் தெரியவில்லை. திரைப்படங்களில் ஒன்றாகப் பணிபுரிந்தோம் என்பதைத் தாண்டி எங்களுக்குள் மிக அதிகமாக நேசம் இருந்தது. அவர் உருவாக்கிய ஒவ்வொரு கதாபாத்திரங்களில் தன் முகம் பார்த்த மலையாளியாக இருந்தார். என்னுடைய வலிகளையும் மகிழ்ச்சியையும் குறைகளையும் அவர் மூலம் திரையில் கண்டேன். நடுத்தர வர்கத்தின் நல்ல, கெட்ட கனவுகளை ஸ்ரீனியைப்போல் வேறு யாரால் சொல்ல முடியும்? ஸ்ரீனியின் மந்திர எழுத்தால் நாங்கள் இணைந்து நடித்த கதாபாத்திரங்கள் காலமின்றி நிற்கின்றன. அவரது ஆசிர்வதிக்கப்பட்ட எழுத்து திறமையால்தான் தாசனும் விஜயனும் மலையாளிகளின் மனதில் அவர்களுக்கான மனிதர்களாக மாறினார்கள். திரையிலும் வாழ்க்கையிலும் தாசனும் விஜயனும் போல சிரித்து, குதூகலித்து, சண்டையிட்டுப் பழகி பயணித்தோம். ஸ்ரீனி, வலிகளைச் சிரிப்பில் ஆட்கொண்ட அன்புள்ளம். அன்பு ஸ்ரீனியின் ஆத்மா சாந்தியடையட்டும்...” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.