’அப்படித்தான் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது’ - கீர்த்தி ஷெட்டி
கீர்த்தி ஷெட்டி தற்போது 3 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.;
சென்னை,
கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘உப்பெனா’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி ஷெட்டி. அடுத்து ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ‘வாரியர்’ படங்களில் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளியான ‘கஸ்டடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘ஏஆர்எம்’ படம் மூலம் மலையாளத்துக்கு சென்றார்.
இவர் தற்போது 3 தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவை அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் தனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை பற்றி கீர்த்தி கூறினார் அவர் கூறுகையில்,
“நான் ஒரு விளம்பர ஆடிஷனுக்கு சென்றிருந்தேன், முடிந்ததும் என்னை அழைத்து செல்ல என் அப்பா வர கொஞ்சம் தாமதமானது.
அப்போது அருகில் ஒரு ஸ்டுடியோ இருப்பதை பார்த்து உள்ளே நுழைந்தேன். அப்போதுதான் அங்கே ஒரு படத்திற்கான ஆடிஷன் நடப்பதை அறிந்தேன்.
அவர்கள் என்னைப் பார்த்ததும், ‘உங்களுக்கு நடிக்க ஆர்வம் உள்ளதா?’ என்று கேட்டார்கள். நான் என் அம்மாவின் தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, இயக்குனர் புச்சி பாபு சனா சார் கால் செய்தார். இப்படித்தான் ‘உப்பெனா’பட வாய்ப்பு எனக்கு வந்தது’ என்றார்.