தென்தமிழக இளைஞர்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பதே ‘பைசன்’ படத்தின் நோக்கம் - மாரி செல்வராஜ்
தென் மாவட்டங்களில் இருந்து சென்று வெற்றி பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர் என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.;
நெல்லை,
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'பைசன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த 17-ந்தேதி திரைக்கு வந்துள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், ‘பைசன்’ படக்குழுவினர் இன்று நெல்லையில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்த பிறகு மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மாரி செல்வராஜ் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
“பைசன் திரைப்படத்திற்கு மக்களிடையே கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தென் மாவட்டங்கள் ஏன் இந்த நிலையில் இருக்கின்றன? என்று பொதுவான கேள்வியை பலர் முன்வைக்கின்றனர். தென் மாவட்டங்கள் மீது ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்று வெற்றி பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
தென் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களிடம், அவர்களுக்கு புரியும் வகையில் பேச வேண்டும், ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களிடமும் நான் பேச வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஒரே வழி மணத்தி கணேசனின் கதையை எடுப்பதுதான் என்று முடிவு செய்தேன். அவரது கதைக்குள் என் கதையும் இருக்கிறது. தென் மாவட்டங்களை சேர்ந்த நிறைய இளைஞர்களின் கதை, கோபம், வலி, தேடல், கனவு எல்லாம் இருக்கிறது.
எனவே மிகப்பெரிய உழைப்பை செலுத்தி இந்த கதையை படமாக எடுத்தோம். தென் மாவட்டங்கள் மீது கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தை மாற்ற வேண்டும், தென்தமிழக இளைஞர்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பதே ‘பைசன்’ படத்தின் நோக்கம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.