“பிளாக்மெயில்” : சினிமா விமர்சனம்
மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;
குழந்தை கடத்தலை பற்றிய கதை. மருந்து கிடங்கில் வேலைபார்க்கும் ஜி.வி.பிரகாசின் வாகனம் திடீரென திருடு போகிறது. அந்த வாகனத்தில் தனக்கு சொந்தமான போதைப்பொருள் இருப்பதாக ஆத்திரப்படும் கிடங்கின் உரிமையாளர் முத்துக்குமார், ஜி.வி.பிரகாசின் காதலி தேஜூ அஸ்வினியை கடத்துகிறார். ‘காதலி வேண்டுமானால் ரூ.50 லட்சம் பணத்தை கொடு’ என்று அவர் மிரட்ட, ஜி.வி.பிரகாஷ் அதிர்ந்து போகிறார்.
இதற்கிடையில் முன்பகை காரணமாக ஸ்ரீகாந்த் - பிந்து மாதவியின் குழந்தையை கடத்துமாறு ஜி.வி.பிரகாசிடம் 'டீல்' பேசுகிறார் லிங்கா. பணத்துக்காக ஒப்புக்கொள்ளும் ஜி.வி.பிரகாஷ், அந்த குழந்தையை நெருங்கும் முன்பாக இன்னொரு மர்ம நபர் குழந்தையை கடத்தி சென்று விடுகிறார். குழந்தையை காணாமல் ஸ்ரீகாந்த் - பிந்துமாதவி பரிதவிக்கிறார்கள். பணத்துக்காக அந்த குழந்தையை தேடுகிறார், ஜி.வி.பிரகாஷ். குழந்தை கிடைத்ததா? கடத்தியது யார்? இதன் பின்னணி என்ன? என்பது பரபரப்பான மீதி கதை.
'பில்டப்' இல்லாத இயல்பான நடிப்பால் கவர்கிறார், ஜி.வி.பிரகாஷ். உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும் உருக வைக்கிறார். அளவான நடிப்பால் கவரும் தேஜூ அஸ்வினிக்கு இன்னும் காட்சிகள் வைத்திருக்கலாம்.
தொழில் அதிபராக ஸ்ரீகாந்தும், அவரது மனைவியாக பிந்து மாதவியும் போட்டிபோட்டு நடித்துள்ளனர். 'எமோஷனல்' காட்சிகளில் பிந்து மாதவி 'ஸ்கோர்' செய்துள்ளார்.
வில்லனாக வரும் லிங்கா, முத்துக்குமார், ரமேஷ் திலக் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. ரெடின் கிங்ஸ்லியின் காமெடி கைகொடுத்திருக்கிறது.
கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் காட்சிகளில் பரபரப்பு தெரிகிறது. சாம் சி.எஸ்.-ன் இசை படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறது. திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் படத்துக்கு பலம். ஹீரோயிசத்தை முன்னிலைப்படுத்தியதால் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டு விட்டது. இரண்டாம் பாதியில் வேகம் குறைவு.
குழந்தை கடத்தல் கதை என்றாலும், பரப்பரப்பு குறையாத புதிய தளத்தில் கதை சொல்லி கவனிக்க வைத்துள்ளார், இயக்குனர் மு.மாறன்.
பிளாக்மெயில் - கொஞ்சம் கம்மி தான்.