விஜய் ஆண்டனிக்கு சக்தி கொடுத்ததா “சக்தித் திருமகன்” - சினிமா விமர்சனம்
அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சக்தித் திருமகன்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;
தலைமை செயலகத்தில் பணியாற்றும் விஜய் ஆண்டனி, யாருக்கும் தெரியாமல் 'அரசியல்' இடைத்தரகராகவும் செயல்படுகிறார். அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை சொல்லும் அத்தனை வேலைகளையும் செய்து பெரியளவில் 'கமிஷன்' பெற்றுக்கொள்கிறார். அதன்மூலம் ஏழை-எளியோருக்கு பண உதவிகளை செய்தும் வருகிறார்.இதற்கிடையில் கோடிக்கணக்கான பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு செயலில் இறங்கி, மத்திய மந்திரி 'காதல் ஓவியம்' கண்ணனிடம் சிக்கி கொள்கிறார் விஜய் ஆண்டனி. இதனால் குறுக்கு வழியில் அவர் சேர்த்த பணம் அவரது கையை விட்டு போகிறது. பணத்தை பறிகொடுக்கும் விஜய் ஆண்டனி, கண்ணனின் ஜனாதிபதி கனவுக்கு தடைபோட முயற்சிக்கிறார்? அது நடந்ததா? என்பதே மீதி கதை.
விஜய் ஆண்டனியின் நிதானமான நடிப்பு ரசிக்க வைக்கிறது. பணத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லும் அவரது போக்கு, சமகால அரசியல் நிகழ்வுகளை நினைவுகூர செய்கிறது. திருப்தி ரவீந்திராவை கதாநாயகி என்று சொல்லி சில காட்சிகளில் மட்டுமே காட்டி ஏமாற்றிவிட்டார்கள். அவருக்கான காட்சிகளில் அழுத்தம் 'மிஸ்ஸிங்'.
பல ஆண்டுகளுக்கு பிறகு, சினிமாவில் மறுபிரவேசம் எடுத்திருக்கும் கண்ணன், வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். ஆங்கிலம் கலந்த அவரது கம்பீர பேச்சு கவனம் ஈர்க்கிறது. செல் முருகன், வாகை சந்திரசேகர், கிரண் குமார், ஷோபா விஷ்வநாத் என நடித்தவர்கள் அத்தனை பேருமே கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளனர்.ஷெல்லியின் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனியின் இசையும் படத்தின் பரபரப்புக்கு துணை நின்றிருக்கிறது.
முதல் பாதியில் வரும் அரசியல் ராஜதந்திர காட்சிகள் படத்துக்கு பலம். எல்லை மீறிய 'லாஜிக்' ஆக இரண்டாம் பாதி நகருகிறது. காட்சிகளை கொண்டு நகர்த்தவேண்டிய இடங்களில் வசனங்களை வைத்து நிரப்ப முயற்சித்தது தவறு. மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியான வில்லனை, வயதான 4 பேருடன் ஹீரோ எதிர்ப்பதை நம்பமுடியுமா?
வழக்கமான ஹீரோயிசம் பேசும் கதை என்றாலும், அரசியல் நய்யாண்டிகளை புகுத்தி ரசிக்க வைத்திருக்கிறார், இயக்குனர் அருண் பிரபு.
சக்தித் திருமகன் - தெம்பு போதாது.