திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து நிலையம் சேர்ந்தது.;
திருச்செந்தூர்,
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி அளித்தனர்.
9-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பகலில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்கபெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுதருளி வீதி உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்திய பின் மீண்டும் காமராஜர் சாலை, உள்மாட வீதி வழியாக மேலக்கோவில் சேர்ந்தனர்.
இரவு சன்னதி தெருவில் உள்ள பூச்சிக்காடு அருணாசலத்தேவர் வகையறா மண்டபத்தில் இருந்து சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி தேர் கடாட்சம் அருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதைமுன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னர் 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 7.00 மணிக்கு முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து நிலையம் சேர்ந்தது.
அதனை தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு தேருக்கு முன்பு யானை செல்ல பஞ்சவாத்தியங்கள் வாசிக்கப்பட்டன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர். அடுத்ததாக வள்ளியம்பாள் தனியாக எழுந்தருளிய தேரும் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையம் சேர்ந்தது.
நெல்லை, தூத்துக்குடி மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.