திருச்சானூரில் பவித்ரோற்சவம்: அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது
பவித்ரோற்சவத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 2-ந்தேதி காலை சுப்ரபாத சேவைக்கு பிறகு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.;
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அல்லது கோவில் ஊழியர்கள் தெரிந்தோ, தெரியாமேலா செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காகவும், கோவிலின் புனிதத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் பவித்ரோற்சவம் பாரம்பரியமாக நடந்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் அடுத்த மாதம் (செப்டம்பர்) மாதம் 5 முதல் 7-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கின்றன. முன்னதாக செப்டம்பர் 2-ந்தேதி மாலை விஷ்வக்சேன ஆராதனை, புண்யாஹவசனம், மிருத்ஸங்ரஹனம், சேனாதிபதி உற்சவம் மற்றும் அங்குரார்ப்பணம் ஆகியவை நடக்கிறது.
தூய்மைப்பணி
செப்டம்பர் 5-ந்தேதி பவித்ர பிரதிஷ்டை, 6-ந்தேதி பவித்ர சமர்ப்பணம் மற்றும் 7-ந்தேதி பூர்ணாஹுதி நடக்கிறது. அதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு 2 லட்டுகளும், 2 வடைகளும் பிரசாதமாக வழங்கப்படும்.
பவித்ரோற்சவத்தை முன்னிட்டு செப்டம்பர் 2-ந்தேதி காலை சுப்ரபாத சேவைக்கு பிறகு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. காலை 7 மணியில் இருந்து 9.30 மணி வரை கோவில் வளாக சுவர்கள், மேற்கூரைகள், பூஜை பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் புனித நீரால் சுத்தம் செய்யப்பட்டு, பின்னர் வாசனை திரவியங்கள் மற்றும் புனித நீர் தெளிக்கப்படும். அதன் பிறகு காலை 10 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆர்ஜித சேவைகள் ரத்து
செப்டம்பர் 4-ந்தேதி அங்குரார்ப்பணம் காரணமாக, திருப்பாவை, கல்யாணோற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுகின்றன.
செப்டம்பர் 5-ந்தேதி அபிஷேக அனந்தர தரிசனம் மற்றும் லட்சுமி பூஜை ரத்து செய்யப்படுகின்றன.
செப்டம்பர் 5, 6 மற்றும் 7-ந்தேதிகளில் கல்யாணோற்சவம், பிரேக் தரிசனம், வேத ஆசீர்வாதனம், குங்குமார்ச்சனை மற்றும் ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுகின்றன. மேற்கண்ட தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.