போடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாலய பூஜை
ராஜகோபுரம் உட்பட கருவறை விமானங்கள் அனைத்தும் ஆகம விதிகளின்படி அத்தி மரப்பலகை மற்றும் கும்ப கலசங்களில் உரு ஏற்றப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.;
போடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில். சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவில் போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்களால் பழனியில் இருந்து பிடிமண் கொண்டு வந்து கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கோவில் தற்போது தமிழ் நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் கடந்த 2012 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் முதற்கட்டமாக ராஜகோபுரம் உட்பட 17 கருவறை விமானங்கள் மற்றும் கலசங்கள் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக இன்று காலை பாலாலயம் நடைபெற்றது. ராஜகோபுரம் உட்பட கருவறை விமானங்கள் அனைத்தும் ஆகம விதிகளின்படி அத்தி மரப்பலகை மற்றும் கும்ப கலசங்களில் உரு ஏற்றப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
ராஜகோபுரம் மற்றும் கருவறை விமானங்கள் உருவங்கள் வரையப்பட்ட அத்தி மரப்பலகைகளுக்கு விசேஷ அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த பாலாலய நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.