திருச்செந்தூர் கோவிலில் வயது முதிர்ந்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி
70 வயதைக் கடந்த தம்பதிகளுக்கு வேட்டி, சேலை, பழங்கள், மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன.;
70 வயது பூர்த்தியடைந்த தம்பதிகளுக்கு தக்கார் அருள் முருகன் மங்கள பொருட்களை வழங்கினார்.
தமிழக சட்டமன்ற அறிவிப்பின்படி, ஆன்மிக ஈடுபாடு கொண்ட 70 வயது பூர்த்தியடைந்த தம்பதியர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி கோவில்களில் நடைபெறுகிறது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கலையரங்கில், வயது முதிர்ந்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கோவில் தக்கார் அருள் முருகன் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவர், 70 வயதைக் கடந்த 51 தம்பதிகளுக்கு வேட்டி, சேலை, பழங்கள், மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து தம்பதியர்கள் மாலை மாற்றிக் கொண்டனர்.
பின்னர் அவர்கள், கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அவர்களிடம் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் ஆசி பெற்றனர்.
நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் நாகவேல், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.