திருப்பதியில் பக்தர்களுக்கு அன்னதான சாப்பாட்டுடன் மசால் வடை - தேவஸ்தானம் ஏற்பாடு
திருப்பதியில் பக்தர்களுக்கு அன்னதான சாப்பாட்டுடன் மசால் வடை வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.;
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ஏழுமலையான தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் அன்னதான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பக்தர்களுக்கு அன்னதான சாப்பாட்டுடன் மசால் வடை வழங்க அறங்காவலர் குழு முடிவு செய்தது.
இதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று முதல் பக்தர்களுக்கு இலவச உணவு உடன் மசால்வடை வழங்கும் திட்டத்தை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு இன்று திருமலையில் உள்ள அன்னதான கூடத்தில் துவக்கி வைத்தார்.
முன்னதாக இந்த திட்டம் பரிசோதனை அடிப்படையில் சில நாட்கள் திருப்பதி மலையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் இன்று அன்னதான கூடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் பக்தர்களுக்கு சாப்பாட்டுடன் வடைகளை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு பரிமாறினார்.
அப்போது பேசிய அவர், இதற்காக தினமும் சுமார் 35 ஆயிரம் மசால் வடைகள் தயார் செய்யப்படும் என்றும், அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், மனித வளம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.