நெல்லையப்பர் கோவில் மண்டபத்தில் இருந்து கடைகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு

நெல்லையப்பர் கோவிலில் மரத்தினால் ஆன மண்டபத்தில் உள்ள மரச்சிற்பங்களை பாதுகாப்பது அவசியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.;

Update:2025-08-27 13:35 IST

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில் மிகவும் பழமையானது. இந்த கோவில் மற்றும் மரத்தினாலான மண்டபத்தில் அமைந்து உள்ள கடைகளால், கோவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. விழா காலங்களில் அதிகரிக்கும் தற்காலிக கடைகளாலும் கோவிலின் பழமையான கட்டமைப்புகள் சேதமடைகின்றன. பழமையான கோவில்களில் வணிக ரீதியாக கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அந்த வகையில் நெல்லையப்பர் கோவிலை பாதுகாக்கவும், மரத்தினால் ஆன மண்டபத்தில் அமைந்து உள்ள கடைகளை உடனடியாக அகற்றவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த ஐகோர்ட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட பழமையான கோவில் வளாகத்தில் வணிக ரீதியிலான கடைகளை அனுமதிக்கவில்லை. ஆனால் எதன் அடிப்படையில் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பழமையான மண்டபத்தில் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பி இதுதொடர்பாக இணை கமிஷனர் ஆஜராகி பதில் அளிக்க உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அறநிலையத்துறை இணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி நேரில் ஆஜராகி, நெல்லையப்பர் கோவிலின் மரத்தினால் ஆன மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்ற கோவில் நிர்வாகம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘நெல்லையப்பர் கோவிலில் மரத்தினால் ஆன மண்டபத்தில் உள்ள மரச்சிற்பங்களை பாதுகாப்பது அவசியம்’ என்றனர்.

விசாரணை முடிவில், பழமைவாய்ந்த நெல்லையப்பர் கோவிலில் உரிய விதிகளை பின்பற்றி, மர மண்டபத்தில் செயல்படும் கடைகளை 12 வாரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்