திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு

கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று முருகப் பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.;

Update:2025-10-28 17:14 IST

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த 22-ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், உற்சவர் சண்முகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று மாலை புஷ்பார்ச்சனை நடைபெற்றது.

விழாவின் இறுதி நாளான இன்று காலை 10 மணிக்கு காவடி மண்டபத்தில் கல்யாண உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு மேள தாளங்கள் முழங்க சீர்வரிசை வைபோக நிகழ்வு நடைபெற்றது. அப்போது திரளாக கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து சாமி தரிசனத்திற்கு வந்த பெண்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சள், குங்குமம், தாலி வழங்கப்பட்டது.

கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று முருகப் பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். மேலும் பள்ளிக்கு விடுமுறை என்பதால் சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்