பூண்டி மாதா பேராலயத்தில் கன்னி மரியாள் பிறப்பு பெருவிழா தேர் பவனி
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில், அன்னை மரியாள் பிறப்புப் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.;
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி-கல்லணை சாலையில் அமைந்துள்ள பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் மரியாள் பிறப்பு பெருவிழா ஆகஸ்டு 30 -ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 9-ஆம் தேதி வரை விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி பிறப்பு பெருவிழா தொடங்கியது. கும்பகோணம் மறை மாவட்ட முன்னாள் பிஷப் அந்தோணிசாமி, சேலம் பிஷப் ராயப்பன் அருள் செல்வம் ஆகியோர் இணைந்து கொடி ஏற்றி திருப்பலி நிறைவேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து நவநாட்கள் எனப்படும் விழா நாட்களில் தினமும் மாலையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. கன்னி மரியாளின் பிறப்பு நாளாக கருதப்படும் நேற்று மாலை கன்னி மரியாளின் பிறப்பு திருவிழா திருப்பலியானது, சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லூர்து ஆனந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பலி நிறைவடைந்ததும் பேராலயத்தின் முன்புறம் நவீன மின் விளக்குகளாலும் மல்லிகை மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் மாதாவின் சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் கன்னி மரியாள் பிறப்பு பெருவிழா தேர் பவனியை சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லூர்து ஆனந்தம் புனிதம் செய்து தொடங்கி வைத்தார். அப்போது திரண்டு இருந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று முழக்கமிட்டபடி தேர் இழுத்தனர். வாண வேடிக்கைகள், பேண்டு வாத்திய இசை முழங்க பவனி வந்த தேர் மீண்டும் கோவில் முகப்பிற்கு வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மரியாள் பிறப்பு பெருவிழா திருப்பலியை இன்று காலை பிஷப் லூர்து ஆனந்தம் நிறைவேற்றி, கொடியை இறக்கி பெருவிழாவை நிறைவு செய்து வைத்தார்.
விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்களுக்கு தேவையான வசதிகளை பேராலய நிர்வாகம் செய்திருந்தது. திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறையினரும் தீயணைப்பு வாகனத்துடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.