கார்த்திகை 1-ந் தேதி: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனம் சிறப்பு பெற்றதாகும்.;

Update:2025-11-17 07:25 IST

சென்னை,

கார்த்திகை மாதம் என்றாலே இறை வழிபாட்டிற்கு உரிய மாதம். இந்த மாதத்தில் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் செல்வார்கள்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனம் சிறப்பு பெற்றதாகும். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிந்து விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய சபரிமலைக்கு பக்தர்கள் செல்வது வழக்கம்.

Advertising
Advertising

அதன்படி, கார்த்திகை 1-ந் தேதியான இன்று அதிகாலையிலேயே அய்யப்ப பக்தர்கள் வீடுகள், நீர்நிலைகளில் புனித நீராடி விட்டு பல்வேறு கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து சுவாமியே சரணம் அய்யப்பா என கோஷமிட்டு தங்களது விரதத்தை தொடங்கினர். தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கருப்பு, காவி மற்றும் நீல உடைகளுடன், பக்தர்களின் சரண கோஷங்கள் ஒலிக்க தொடங்கியுள்ளது.

மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள். மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களும், மகர விளக்கு பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 60 நாட்களும் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்