திருப்பரங்குன்றம் மலையில் வற்றாத காசி தீர்த்தம்
காசி தீர்த்தத்திற்கு அருகில் மேற்கு நோக்கிய காசி விஸ்வநாதர், விசாலாட்சி சன்னதியும் எதிரே சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன.;
திருப்பரங்குன்றம் மலையில் பல சுனைகள் உள்ளன. இதில் ஒரு சுனையில் உள்ள தீர்த்தம் காசி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதரை வணங்கி இந்த தீர்த்தத்தை பருகினால் பாவம் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம். இந்த சுனை முருகப்பெருமானால் உருவாக்கப்பட்டது.
முற்காலத்தில் கற்கி முனி என்ற பூதம், பலி கொடுப்பதற்காக நக்கீரர் உள்ளிட்ட ஆயிரம் முனிவர்களை கடத்திச் சென்றது. அந்த பூதத்தை முருகப்பெருமான் அழித்து முனிவர்களை விடுவித்தார். பின்னர் பூதம் தன்னை தொட்டு தூக்கியதால் ஏற்பட்ட பாவத்தை போக்குவதற்காக நக்கீரர் காசிக்கு புறப்பட முயன்றார். அவரை தடுத்த முருகப்பெருமான், தனது வேலால் பாறையில் கீறியவுடன் அதிலிருந்து கங்கை தீர்த்தம் உருவானது. அதில் நீராடி பாவத்தை போக்கினார் நக்கீரர். அவர் பூஜை செய்த இடத்தை பஞ்சாட்சர பாறை என்கின்றனர்.
காசி தீர்த்தத்திற்கு அருகில் மேற்கு நோக்கிய காசி விஸ்வநாதர், விசாலாட்சி சன்னதியும் எதிரே சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. இந்த சன்னதியில் நக்கீரருக்கு சிலை உள்ளது. தீர்த்தத்தை ஒட்டியுள்ள பாறையில் நான்கு சிவலிங்கங்களும், சிவ வடிவமும், காசி விஸ்வநாதர், சுப்பிரமணியர், அம்பிகை, பைரவர், கற்பக விநாயகர் சிற்பங்களும் செதுக்கப்பட்டு உள்ளன. பூதத்தால் நக்கீரர் அடைத்து வைக்கப்பட்ட பஞ்சாட்சர குகை, சரவணப்பொய்கை அருகில் இருக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் தலமாக முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் மலை கோவிலின் மூல மூர்த்தி பரங்கிரிநாதர் என்ற சிவலிங்கதிருமேனியே பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியுடன் அருள்பாலிக்கிறார். விநாயகர், திருமால், துர்க்கை ஆகியோரும் தரிசனம் தருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மதுரை நகரத்தின் தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. இத்தலத்திற்கு இலக்கியங்களில் தன்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி, பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்தமலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. திரு+பரம்+குன்றம். பரம் என்றால் பரம்பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று(மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாக திருப்பரங்குன்றம் என ஆயிற்று.