குலசை தசரா திருவிழா கொடியேற்றத்தை பிரம்ம முகூர்த்தத்தில் நடத்த வேண்டும்- பக்தர்கள் வலியுறுத்தல்
கொடியேற்றத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான அடிப்படை வசதி, ஊர் மக்கள் நலன், கொடியேற்றம் நேரம் குறித்து பொதுமக்கள், பக்தர்கள், தசரா குழுவினரிடம் கருத்து கேட்கப்பட்டது.;
தசரா திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இத்திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கோவில் அபிஷேக மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். அறங்காவலர் குழு உறுப்பினர் மகாராஜன்முன்னிலை வகித்தார். கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் வரவேற்றார். திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில், கடந்த ஆண்டு கொடி பட்டம் கோவிலுக்கு காலதாமதமாக வந்தது. எனவே பெரிய கோவில்களில் நடைபெறுவது போல் பிரம்ம முகூர்த்தத்தமான அதிகாலையில் கொடியேற்றம் நடைபெற்றால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்ற பக்தர்களின் கோரிக்கை குறித்தும், கொடியேற்றத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான அடிப்படை வசதி, ஊர் மக்கள் நலன், காப்பு கயிறு சீராக வழங்குதல், கொடி பட்டம் ஊர் சுற்றி வருதல், கொடியேற்றம் நேரம் குறித்து பொதுமக்கள், பக்தர்கள், தசரா குழுவினரிடம் கருத்து கேட்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பக்தர்கள், தசரா குழுவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், பிரம்ம முகூர்த்தத்தில் தசரா திருவிழா கொடியேற்ற வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர். குலசேகரன்பட்டினத்தில் ஒருநாள் முன்பாக கொடிபட்டம் ஊர்வலத்தை முதல்நாளில் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விரிவாக ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முடிவில் கோவில் கணக்கர் டிமிட்ரோ நன்றி கூறினார்.