இன்று பஞ்சமி திதி: வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
சப்த கன்னியர்களில் முக்கியமான வாராகியை, பஞ்சமி திதியில் வழிபாடு செய்வது, விசேஷ பலன்களை பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.;
சப்த மாதாக்களில் முக்கியமானவளான வாராகிக்கு உகந்த நாள் பஞ்சமி திதி. இந்த நாளில் வாராகியை வழிபாடு செய்வது, சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை. வீட்டில் வாராகி யந்திரம் வைத்திருப்பவர்கள், விக்கிரகம் வைத்திருப்பவர்கள், பால், தேன், இளநீர், பஞ்சாமிர்தங்களால் தேவிக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சிப்பது நன்மையளிக்கும். வாராகியை வழிபடுபவர்களுக்கு, மந்திர சித்தி, வாக்கு சித்தி கிடைக்கும். இந்த தேவியை பூஜிப்பவர்களுக்கு, செய்வினை அண்டாது என்பது நம்பிக்கை.
அவ்வகையில் இன்று மாசி மாதம் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஆலயங்களில் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சிறப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்கின்றனர்.
வாராகியை வாசனைப் பூக்களால், குறிப்பாக சிவப்பு நிற பூக்களைக் கொண்டு பூஜிப்பது விசேஷம். கருப்பு உளுந்தில் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும். சர்க்கரை வள்ளி கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், வாராகி தேவிக்கு சிறப்புக்குரிய நைவேத்தியங்கள்.