பெரம்பூர் சேமாத்தம்மன் கோவில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
கடந்த நான்கரை ஆண்டுகளில் 12,199 திருக்கோயில்களில் ரூ. 3,878 கோடி மதிப்பிலான 14,746 பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.;
பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோயிலில் ரூ.74.30 இலட்சம் மதிப்பீட்டில் 11 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்ச சேகர்பாபு இன்று (25.09.2025) தொடங்கி வைத்தார். மேலும், ரூ. 93 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மகா மண்டபம் கட்டுமானப் பணிகள் மற்றும் திருக்குளம் சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அமைச்சர் சேகர் பாபு, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
கடந்த நான்கரை ஆண்டுகளில் 12,199 திருக்கோயில்களில் ரூ.6,991 கோடி மதிப்பிலான 27,672 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் ரூ. 3,878 கோடி மதிப்பிலான 14,746 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அதில் உபயதாரர்கள் மட்டும் ரூ.1,471.35 கோடி மதிப்பிலான பணிகளை செய்து தருகின்றனர்.
பெரம்பூர், சேமாத்தம்மன் திருக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் ரூ.74.30 இலட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணிகளை இன்றைய தினம் தொடங்கி வைத்துள்ளோம். மேலும், பக்தர்களுக்கு தேவையான கூடுதல் வசதிகளை செய்து தரவும் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, ஒட்டு மொத்த திட்ட மதிப்பீடானது ரூபாய் ஒரு கோடியை எட்டும். இத்திருக்கோயிலில் ஏற்கனவே ரூ. 52 இலட்சம் மதிப்பீட்டில் மகா மண்டபத்தினை உபயதாரர் திரு. சத்தியமூர்த்தி அவர்கள் கட்டி தருகின்றார். அந்த பணியும் ரூ. 41 இலட்சம் மதிப்பீட்டில் திருக்குளத்தை சீரமைக்கின்ற பணியும் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
குடமுழுக்கு
இந்த ஆட்சி பொறுப்பேற்ற நாள்முதல் இன்றுவரை 3,707 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. புரட்டாசி மாதமாக இருந்தாலும் இன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இது முதல்வர் அவர்களின் ஆட்சியில் எல்லா நாட்களுமே எல்லோருக்கும் உகந்த நாள் என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ரூ.8,000 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, 2,15,384 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. வளர்ச்சித் திட்டங்கள், திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் பணிகளை மேற்கொள்கின்ற போது ஒருசிலர் இதற்கு தடைகளை உருவாக்கி வருகின்றனர். எத்தகைய சூழ்நிலையிலும் இந்த தடைகளை தகர்த்தெறிகின்ற ஆளுமை மிக்கவராக நமது முதலமைச்சர் அவர்கள் திகழ்வதோடு, இத்தகைய அறப்பணிகளால் வரலாற்றில் அவரது பெயரும் இடம்பெறும்.
25 திருக்கோயில்களில் மாதந்தோறும் பௌர்ணமி நாளான்று 108 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகின்றது. இதற்காக நபர் ஒருவருக்கு பித்தளை காமாட்சி விளக்கு, புடவை, ஜாக்கெட், குங்கும சிமில் மற்றும் பூஜை பொருட்களுக்கான செலவினத் தொகை ரூ.800 –ல் ரூ.100 மட்டும் பக்தர்களிடமிருந்து பெறப்படுகிறது. இதன்மூலம் சுமார் 74,000 பெண் பக்தர்கள் பயன்பெற்றுள்ளனர். ஆடி மாதத்தில் 10 அம்மன் திருக்கோயில்களில் கூழ் வார்த்தல் மற்றும் 5 அம்மன் திருக்கோயில்களில் ஒருலட்சம் பெண் பக்தர்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
குலசை தசரா விழா
குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றாலும் அதற்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நானும், அந்த மாவட்டத்தின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களும் நேரடியாக சென்று ஆய்வு செய்து முன்னேற்பாடு பணிகளை விரைவுப்படுத்தினோம். அந்த திருக்கோயிலில் தான் முதன்முதலாக திருவிளக்கு பூஜை திட்டத்தை தொடங்கி வைத்தோம். மருத்துவ மையமும் தொடங்கப்பட்டுள்ளது.
பணி வரன்முறை
திருக்கோயில்களில் ஐந்தாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய பணியாளர்களை வரன்முறைபடுத்தும் திட்டம் கடந்த ஆட்சியில் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இந்த அரசு பொறுப்பேற்றபின், 1,347 பணியாளர்கள் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1,500 பணியாளர்களை வரன்முறைபடுத்துவதற்கான கோப்பு நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் அதற்கான அனுமதியை பெற்று பணி நிரந்தரம் செய்யப்படுவர். இது தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டல இணை ஆணையர் ஜ.முல்லை, துணை ஆணையர் இரா.ஹரிஹரன், திருக்கோயில் செயல் அலுவலர் க.பிரபாகர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், கிருஷ்ணகுமார், ராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.