ராமேஸ்வரம் கோவிலில் நவராத்திரி திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்பு எய்து அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி, அக்டோபர் 2-ம் தேதி நடைபெறுகிறது.;

Update:2025-09-19 17:47 IST

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டின் நவராத்திரி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகின்றது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு புரட்டாசி மகாளய அமாவாசை முன்னிட்டும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் அம்பாள் எழுந்தருள வெள்ளி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அம்பாள் தேரோட்டம் முடிந்து தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்பாளுக்கு காப்பு கட்டுதலுடன் நவராத்திரி திருவிழா தொடங்குகின்றது.

திருவிழாவின் முதல் நாளான வருகின்ற 22-ஆம் தேதி அன்று திங்கள்கிழமை பர்வதவர்த்தினி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தொடர்ந்து விழாவில் 2-வது நாள் அன்னபூரணி, 3-வது நாள் மகாலட்சுமி, 4-ம் நாள் சிவதுர்க்கை, 5-ம் நாள் சரஸ்வதி,6-வது நாள் கௌரி சிவ பூஜை, 7-வது நாள் சாரதாம்பிகை, 8-வது நாள் கஜலட்சுமி, 9-வது நாள் மகிஷாசுரமர்த்தினி,10-வது நாள் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய அவதாரங்களில் கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அம்பாள் காட்சி தருகிறார்.

நவராத்திரி திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சி மற்றும் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு மேல் கோவிலில் இருந்து சாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள மகரநோன்பு திடலுக்கு எழுந்தருள்கின்றனர். பின்னர் அம்மன், அம்பு எய்தி மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.

நவராத்திரி திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் கொலுமண்டபம் அமைய உள்ள அம்பாள் சன்னதி பிரகாரம் முழுவதும் அலங்கார தோரணங்கள் மற்றும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான கொலு பொம்மைகள் அடுக்கி வைப்பதற்காக கொலுமேடையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்லதுரை தலைமையில் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்