ஆதியோகி ரத யாத்திரை: வரும் 23-ம் தேதி திருநெல்வேலிக்கு வருகை
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.;
திருநெல்வேலி,
ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆதியோகி ரத யாத்திரை திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு திருநெல்வேலி பிரஸ் கிளப்பில் இன்று (21/01/2026) நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்தி பேரவையின் சிவனடியார்கள் இளங்கோவன், சண்முகசுந்தரம் மற்றும் பிரேம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
ஆதியோகி ரத யாத்திரை
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
ஆதீனங்களின் அருளாசியோடு…
தமிழகத்தின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் 4 ஆதியோகி ரதங்களை தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்து அவர்களின் அருளாசியினை வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை, கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.
தெற்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை டிசம்பர் 23-ம் தேதி, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
அதேபோன்று வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த டிசம்பர் 26-ம் தேதி தொடங்கி வைத்தார்.
பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக!
இந்தாண்டு ஆதியோகி ரத யாத்திரை தமிழ்நாடு முழுவதும் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக நடைபெறுகிறது.
இதில் குறிப்பாக திருநெல்வேலியை உள்ளடக்கிய தெற்கு மண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில்…
தெற்கு மண்டலத்தை பொறுத்த வரையில் தேனிக்கு கடந்த டிச.24-ம் தேதி வந்தடைந்த ரத யாத்திரை, மதுரை சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பயணித்து இன்று (ஜன. 21) தென்காசியில் நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலியில் வரும் ஜன 23-ம் தேதி பழையபேட்டை, நெல்லையப்பர் கோவில், ராமையன்பட்டி, மானூர், உக்கிரன்கோட்டை, அழகிய பாண்டியபுரம், குப்பனாபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆதியோகி ரதம் ஜன.24-ம் தேதி தேவர் குளம், வன்னிக்கோனேந்தல், பனைவடலி சத்திரம், மூவிருந்தாளி, கயத்தாறு, தாழையூத்து, சங்கர்நகர் வழியாக பயணித்து ஜெயேந்திரா பள்ளியை சென்றடைய உள்ளது.
அதன் பின்னர் ஜன.25-ம் தேதி இராஜவல்லிபுரம், பாளையங்கோட்டை, கே.டி.சி.நகர், சாரதா கல்லூரி, நான்குநேரி டோல்கேட், வள்ளியூர், செட்டிகுளம் உள்ளிட்டப் பகுதிகள் வழியாக ரத யாத்திரை நடைபெற உள்ளது.
திருநெல்வேலியில் மஹாசிவராத்திரி விழா
கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது.
அந்த வகையில் திருநெல்வேலியில் குற்றால சாலையில் அமைந்துள்ள சோனா மஹாலில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது.
தெற்கு மண்டலத்தில் தொடரும் யாத்திரை
திருநெல்வேலியை அடுத்து ஜன. 26 அன்று கூடங்குளத்தில் தொடங்கும் இந்த யாத்திரை, தொடர்ந்து ஜன. 27 - 29 தூத்துக்குடியிலும், ஜன. 30 திருச்செந்தூரிலும், ஜன. 31 கோவில்பட்டியிலும் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில், பிப். 1 - 3 நாகர்கோவிலிலும், பிப். 4 - 5 வெள்ளிச்சந்தையிலும் ஆதியோகி ரதம் பயணிக்கும். அடுத்து பிப். 6 - 7 நாட்டாலம், பிப். 8 - 9 மார்த்தாண்டம், பிப். 14 அன்று நாட்டாலம் வழியாக பயணித்து இறுதியாக பிப். 15 அன்று மார்த்தாண்டத்தில் ஈஷா மஹாசிவராத்திரி நேரலை செய்யப்படும் வளாகத்திற்கு சென்றடைய உள்ளது.
ஆதியோகி ரதம்
ஆதியோகி ரதங்கள், 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொண்டு வருகின்றன. இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக சுமார் 30,000 கிலோமீட்டர் பயணிக்க உள்ளன.
ஆதியோகி ரதங்கள் பயணிக்கும் இடங்களில், அங்குள்ள ஆதீனங்கள், முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பை வழங்கி வருகின்றனர். ஆதியோகிக்கு விருப்பமுள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை அர்ப்பணிக்கலாம்.
சிவ யாத்திரை
இதனுடன், ‘சிவ யாத்திரை’ எனும் பாதயாத்திரையை சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர். அத்துடன், 63 நாயன்மார்களின் திருவுருவங்களைத் தாங்கிய ஒரு தேருடன் அடியார்கள் பாதயாத்திரையாக கோவை ஆதியோகி வளாகத்திற்கு வருகை தர உள்ளனர்.
நாகர்கோவிலில் இருந்து வெள்ளியங்கிரிக்கு பாதயாத்திரை
அந்த வகையில் நாகர்கோவில் சுசிந்திரத்தில் இருந்து வரும் ஜன.24-ம் தேதி ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய திருத்தேருடன் சிவனடியார் கோவை வெள்ளியங்கிரிக்கு பாதயாத்திரையாக புறப்பட உள்ளனர். இவர்கள் 20 நாட்கள் பயணித்து பிப்.13-ம் தேதி ஈஷா யோக மையத்தை அடைந்து வெள்ளியங்கிரி மலை ஏறி தங்கள் பாதயாத்திரையை நிறைவு செய்வார்கள்.