பரமத்தி வேலூர்: அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா.. கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு

பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் கொலு பொம்மைகள் வைத்து அம்மனுக்கும் கொலு பொம்மைகளுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update:2025-09-23 16:21 IST

நவராத்திரி விழா தொடங்கிய நிலையில் இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைத்து வழிபடத் தொடங்கினர். 30.9.2025 அன்று துர்காஷ்டமி, 1.10.2025 அன்று சரஸ்வதி பூஜை, 2.10.2025 அன்று விஜயதசமி நிகழ்வோடு நவராத்திரி விழா முடிவடைகிறது. இந்த நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை.

அம்மன் கோவில்களில் நவராத்திரி கொலு படிகள் ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப் படை வரிசையில் அமைக்கப்பட்டு அதில் நேர்த்தியாக கொலு பொம்மைகள் அடுக்கப்பட்டுள்ளன. முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைத்துள்ளனர். இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்தனர். மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைத்தனர். நான்காவது படியில் நான்கு அறிவுகொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகள் வைக்கப்பட்டன.

ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகள், ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகள், ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகள் இடம்பெறச் செய்தனர். எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைத்தனர். ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள், அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபடுகின்றனர் .

படிப்படியாக முன்னேறப் படிகளிலே கொலு வைத்து நாம் வழிபட வேண்டும் என்பது ஐதீகம். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார் பகுதிகளில் நவராத்திரி விழா களைகட்டி உள்ளது. பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் கொலு பொம்மைகள் வைத்து நேற்று அம்மனுக்கும் கொலு பொம்மைகளுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதேபோல் கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பரமத்தி வேலூர் பேட்டை ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், வடகரையாத்தூர் சுயம்பு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் கொலு பொம்மைகளை அடுக்கி வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் நவராத்திரி விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வர்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மூலவர் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நாமாவளிகள் கூறி உதிரிப்பூ அர்ச்சனை செய்து அடுக்காரத்தி, கும்ப ஆரத்தி, ஏகாரத்தி, பஞ்சாரத்தி உடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடை, சாமரம், விசிறி, கண்ணாடி போன்ற மங்கல பொருட்களினால் உபசாரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்