திருவனந்தபுரம் கரிக்ககம் சாமுண்டி தேவி கோவிலில் பொங்கல் வழிபாடு
கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு சாமுண்டி தேவிக்கு படைத்து வழிபட்டனர்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கரிக்ககம் சாமுண்டி தேவி கோவில் புகழ் பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். 7 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் நிறைவு நாளன்று ஏராளமான பெண்கள் கோவில் வளாகத்தில் திரண்டு சாமுண்டி தேவிக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந் தேதி மாலை 5 மணிக்கு குரு பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அரங்கத்தில் கலாசார விழா நடைபெற்றது. பொங்கல் விழாவையொட்டி 8-ந் தேதி காலை 8 மணிக்கு தேவியின் தங்க ரத ஊர்வலம் நடைபெறுகிறது. விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தங்க ரதத்தை இழுத்தனர்.
திருவிழாவின் நிறைவு நாளான நேற்று பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு நடைபெற்றது. தமிழ்நாடு, கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பெண்கள் வருகை தந்து பொங்கலிட்டு சாமுண்டி தேவிக்கு படைத்து வழிபட்டனர்.