புகளூர்: கக்கன் காலனி மதுரை வீரன் கோவில் திருவிழா
திருவிழாவில் மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மி அம்மாள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.;
கரூர் மாவட்டம் புகளூர் அருகே கக்கன் காலனியில் மதுரை வீரன், வெள்ளையம்மாள் பொம்மியம்மாள் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கக்கன் காலனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, அங்கிருந்து தீர்த்த குடங்களுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து மதுரை வீரன் சுவாமி, வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை மாலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையல் போட்டு வழிபட்டனர். பொங்கல் பூஜையைத் தொடர்ந்து இரவு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் கிடாவெட்டி சமைத்து படையல் போட்டு அசைவ பூஜை நடைபெற்றது. முன்னதாக மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மி அம்மாள் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
விழாவில் கக்கன் காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.