திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கோவிலில் 3 கருட சேவை
காய்சினிவேந்தப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான், நத்தம் எம் இடர்கடிவான் ஆகிய மூன்று உற்சவர்ர்கள் கருடவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.;
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் ஶ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கோவில் 3-வது திருப்பதி ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். அதன்படி கடந்த மார்ச் 22 ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. அதனை தொடர்ந்து 5ஆம் திருவிழாவான நேற்று மூன்று கருடசேவை நடைபெற்றது. திருப்புளியங்குடி காய்சினிவேந்தப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான், நத்தம் எம் இடர்கடிவான் ஆகிய மூன்று உற்சவர்கள் கருடவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
முன்னதாக காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 6.30 மணிக்கு நித்தியல், 7 மணிக்கு உற்சவர் காய்சினிவேந்தன் கருட மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 10 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான், நத்தம் எம் இடர்கடிவான் ஆகியோர் திருப்புளியங்குடி வந்தனர். 11.30 மணிக்கு மூன்று பெருமாள்களுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் 12 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்ய பிரபந்தங்கள், சாத்துமுறை, தீர்த்தம், சடாரி, பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு சாயரட்சை, 6.15 மணிக்கு பெருமாள்கள் தங்களின் கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு 8 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி தந்தனர். பின்னர் மாட வீதி, ரத வீதிகளில் வீதி உலா வந்தனர். மார்ச் 30 ந்தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.