திருச்செந்தூர் சிவன் கோவில், வெயிலுகந்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.;
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவில்களான ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோவில், வெயிலுகந்தம்மன் கோவில், ஸ்ரீ அமிர்தகுண விநாயகர் மற்றும் ஸ்ரீ சொர்ணவர்ண சாஸ்தா கோவில்களில் கும்பாபிஷேக விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 4-ந் தேதி மாலை தொடங்கியது. நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தது. இன்று அதிகாலை 4-ம் கால யாகசாலை பூஜைகளும், மகா பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் யாத்ராதானமும் நடந்தது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட புனித நீர் கோவில் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து காலை 5.45 மணிக்கு விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பிரசன்ன பூஜை, புஷ்பாஞ்சலி மற்றும் சுவாமி நடராஜர் புறப்பாடு நடைபெறுகிறது.
அதேபோல் வெயிலுகந்தம்மன் கோவிலில் யாகசாலை பூஜைகள் கடந்த 4-ந் தேதி மாலை தொடங்கியது. நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தது. இன்று அதிகாலை 4-ம் கால யாகசாலை பூஜைகளும், மகா பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் யாத்ராதானமும் நடந்தது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட புனித நீர் கோவில் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து காலை 6.18 மணிக்கு விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை பார சைவ பூஜா ஸ்தாணிகர்கள் செய்தனர். இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.