உலகக்கோப்பை கால்பந்து கொண்டாட்டத்தின் சில ஆச்சரியமான தகவல்கள்...!

உலகக்கோப்பை கால்பந்து கொண்டாட்டத்தின் சில ஆச்சரியமான தகவல்கள் பற்றி பார்ப்போம்.

Update: 2022-11-19 23:13 GMT

தோகா,

* போர்ச்சுகலின் கிறிஸ்டியானோரொனால்டோ சர்வதேச கால்பந்தில் 117 கோல்கள் அடித்து சாதனையாளராக திகழ்கிறார். அவருக்கு இது 5-வது உலக கோப்பை போட்டியாகும். இந்த உலக கோப்பையில் ஆடும் ஆஸ்திரேலியா, கேமரூன், ஈகுவடார், செர்பியா, ஜப்பான், ஸ்பெயின், துனிசியா உள்பட 15 அணிகளில் ஒவ்வொரு அணியிலும் 26 வீரர்கள் சேர்த்து அடித்துள்ள கோல்களை விட ரொனால்டோவின் கோல் எண்ணிக்கை அதிகம் என்பது ஆச்சரியமான உண்மையாகும்.

* கத்தார் உலக கோப்பையில் மொத்தம் 831 வீரர்கள் கால்பதிக்கிறார்கள். 40 வயதான மெக்சிகோ கோல் கீப்பர் அல்பிரிடோ தலவெரா தொடரின் அதிக வயது வீரராகவும், 18 வயதான ஜெர்மனியின் யோசோபா மோகோகோ இளம் வயது வீரராகவும் அறியப்படுகிறார்கள்.

* நெதர்லாந்து வீரர் 28 வயதான ஆன்ரியாஸ் நோப்பெர்ட் 203 சென்டிமீட்டர் உயரம் கொண்டவர். இந்த உலக கோப்பையில் உயரமான வீரர் இவர் தான்.

*மின்னல் வேகத்தில் கோல் போட்டவர், துருக்கியின் ஹகன் சுகுர். 2002-ம் ஆண்டு உலக கோப்பையில் தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில், ஆட்டம் தொடங்கிய 11 வினாடிக்குள் பந்து கோல்வலையை முத்தமிட்டது.

*2018-ம் ஆண்டு உலக கோப்பையில் களம்கண்ட ஐஸ்லாந்து அணி, உலக கோப்பையில் விளையாடிய குறைந்த மக்கள் தொகையை கொண்ட நாடாகும். அந்த உலக கோப்பையில் வெற்றி இன்றி முதல் சுற்றுடன் வெளியேறிய ஐஸ்லாந்தின் தற்போதைய மக்கள் தொகை 3 லட்சத்து 46 ஆயிரம் மட்டுமே. வடக்கு அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள இந்த தீவு தேசம் கத்தார் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை.

* உலக கோப்பையில் குறைந்த வயதில் கோல் அடித்தவர் பிரேசிலின் பீலே. 1958-ம் ஆண்டு வேல்சுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் போட்ட போது அவரது வயது 17 ஆண்டு 239 நாட்கள். இளம் வயதில் 'ஹாட்ரிக்' கோல் (பிரான்சுக்கு எதிராக), இளம் வயதில் இறுதி ஆட்டத்தில் கோல் போட்டவர் (சுவீடனுக்கு எதிராக), அதிக உலக கோப்பையை வென்ற அணியில் பங்கெடுத்தவர் (3 முறை 1958, 1962, 1970) ஆகிய முத்தாய்ப்பான சாதனைகளையும் பீலே தன்னகத்தே கொண்டுள்ளார்.

* அதிக வயதில் கோல் அடித்தவர் கேமரூனின் ரோஜர் மில்லா. 1994-ம் ஆண்டு தொடரில் ரஷியாவுக்கு எதிரானஆட்டத்தில் அவர் பந்தை வலைக்குள் திணித்த போது அவரது வயது 42 ஆண்டு 39 நாட்கள்.

Tags:    

மேலும் செய்திகள்