தங்கத்தின் விலை அதிரடியாக குறையுமா..? வெளியான பரபரப்பு தகவல்

வரும் ஆண்டுகளில் தங்கம் விலை பெரும் சரிவை சந்திக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.;

Update:2025-04-02 20:34 IST

கோப்புப்படம்

வாஷிங்டன்,

கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள தங்கத்தின் விலை உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும், நகைகளை வாங்கும் நுகர்வோருக்கு பெரும் சுமையாக உள்ளது. இந்நிலையில், தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு வரக்கூடும் என்றும், இது வாங்குபவர்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடும் என்றும் சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதன்படி இனி வரும் நாட்களில் தங்கம் விலை 38 சதவீதம் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிதிச் சேவை நிறுவனமான மார்னிங்ஸ்டாரின் சந்தை நிபுணர் ஜான் மில்ஸ் இதனை தெரிவித்திருக்கிறார். ஒரு அவுன்ஸ் $3,080 இருந்து $1,820 வரை குறையலாம் என்றும் அவர் கணித்திருக்கிறார்.

மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.89,510 என்று இருந்தது. இந்த விலை ரூ.55,496 ஆகக் குறையலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.

உலகமே அமெரிக்க பொருளாதார சந்தையை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் டிரம்ப் வந்த பிறகு பல மாற்றங்கள் எற்பட்டிருக்கின்றன. இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாகும். டிரம்பின் வரி நடவடிக்கை கூட விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தங்கத்தின் விலையில் தற்போது ஏற்ற இறக்கமான போக்கு இருந்தபோதிலும், மில்ஸ் மற்றும் பிற சந்தை ஆய்வாளர்கள், தங்க விலை வரும் நாட்களில் கூர்மையான சரிவை சந்திக்க கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

உலகளவில் தங்க சேமிப்பு 9 சதவீதம் அதிகரித்து 2,16,265 டன்னாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா தங்கம் உற்பத்தியை அதிகரித்திருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருக்கும் மத்திய வங்கிகளில் தங்கம் 1,000 டன்னுக்கும் அதிகமாக இருப்பு இருக்கிறது. எனவே மேலும் அதிகமாக தங்கத்தை வாங்க வங்கிகள் விருப்பம் காட்டவில்லை.

இதுதொடர்பான ஆய்வு ஒன்றில் 71 சதவீத வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கின்றன. எனவே தங்கத்தின் தேவை குறைய தொடங்கி உள்ளது. முதலீட்டாளர்களும் கொஞ்ச காலத்தில் தங்கத்திற்கு மாற்றாக வேறு ஒரு விஷயத்தில் முதலீடு செய்ய தொடங்குவார்கள். இதனால் விலை மளமளவென குறையும் என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்