நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி அதிகரிப்பு
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 சதவீதம் சேவைத்துறை வருவாயே பங்களிப்பு செலுத்துகிறது.;
புதுடெல்லி,
ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் 3 முக்கிய துண்களாக வேளாண்துறை, உற்பத்தித்துறை மற்றும் சேவைத்துறை விளங்குகின்றன. நம் நாட்டின் முக்கிய பொருளாதார ஆதாரமாக வேளாண்மை இருந்தது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் வேளாண்துறையை சுரண்டி எடுத்து வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. நாடு விடுதலை அடைந்த காலத்தில் நாட்டின் வேளாண்துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
அவற்றில் ஒன்று பசுமை புரட்சி என்றாலும் வேளாண்துறையில் கிடைக்கும் நன்மைகள் நமக்கே போதுமானதாக அமைந்தது. நாட்டின் உற்பத்தித்துறையை பெருக்க நமது நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் அவ்வளவு கைகொடுக்கவில்லை. மேலும் நம் நாட்டில் வெட்டி எடுக்கப்படும் கச்சா பொருட்கள் நமக்கே பற்றாக்குறை ஏற்பட்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும நிலை உள்ளது.
ஆனால் இதற்கு நேற்மாறாக நாட்டின் சேவைத்துறை கடும் எழுச்சியடைந்தது. நாட்டில் கணினி அறிமுகமானதற்கு பின்னர் தகவல் மென்பொருள் உற்பத்தி மற்றும் வெளிநாடுகளுக்கு மென்பொருள் உருவாக்கம் மற்றும் பராமரிப்பில் இந்திய நிறுவனங்கள் அமெரிக்கா நிறுவனங்களுக்கு நிகராக போட்டிப்போட்டு வருகிறது. இதனால் நாட்டின் சேவைத்துறை கணிசமாக உயர்ந்தது.
தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 சதவீதம் சேவைத்துறை வருவாயே பங்களிப்பு செலுத்துகிறது. இவ்வாறு நாட்டின் முக்கியத்துவமான துறைகளில் ஒன்றாக வளர்த்து நிற்கும் சேவைத்துறை வளர்ச்சி மாதந்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் இதுவரை இல்லாத உச்சம் அடைந்தது.
நாட்டின் சேவைத்துறை வளர்ச்சியடைந்துள்ளதாக எச்.எஸ்.பி.சி. வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. எஸ் அன்ட் பி குளோபல் நிறுவனத்துடன் இணைந்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த நவம்பரில் நாட்டின் சேவைத்துறை 59.8 புள்ளிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தை காட்டிலும் 0.9 புள்ளிகள் அதிகம் பெறப்பட்டுள்ளது. அக்டேபாரில் இந்திய சேவைத்துறை 58.9 புள்ளிகளை பெற்றிருந்தது.