10 நிமிடம் தாமதம்.. விமான விபத்தில் இருந்து தப்பிய இளம்பெண்
10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால், அவரால் விமானத்தை பிடிக்க முடியவில்லை.;
அகமதாபாத்,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் வெடித்து சிதறிய விபத்தில் அதில் பயணித்த 241 பேர் உடல் கருகி பலியானார்கள். இந்த கோர விபத்தில் ஒருவர் உயிர் தப்பினார். விபத்து மீட்புப் பணிகள் நேற்று (ஜூன் 12) நள்ளிரவு வரை நீடித்தது.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிக்கவிருந்த பூமி சவுஹான் என்ற இளம்பெண், விமான நிலையத்திற்கு தாமதமாக வந்துள்ளார். இதனால் அவரால் விமானத்தை பிடிக்க முடியவில்லை. இதனால் அவர் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிக்காமல் உயிர்பிழைத்துள்ளார். இது தொடர்பாக பூமி சவுஹான் கூறியதாவது;
"போக்குவரத்து நெரிசல் இருந்ததால், நான் விமான நிலையத்திற்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றேன். என்னை உள்ளே அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கெஞ்சினேன். அவர்கள் அனுமதிக்காததால் மீண்டும் திரும்பிவிட்டேன். சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ந்துவிட்டேன்." என்றார்.