மகா கும்பமேளா நடைபெற்ற இடத்தில் 15 நாட்கள் சிறப்பு தூய்மைப் பணி தொடக்கம்
மகா கும்பமேளா நடைபெற்ற இடத்தில் 15 நாட்கள் சிறப்பு தூய்மைப் பணி தொடங்கப்பட்டுள்ளது.;
பிரயாக்ராஜ்,
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி தொடங்கியது. பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது பூரண கும்பமேளா என்றும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது மகா கும்பமேளா என்றும் அழைக்கப்படுகிறது.
மகா கும்பமேளா கடந்த 26-ந்தேதி நிறைவடைந்ததை தொடர்ந்து, அந்த இடத்தில்15 நாட்கள் சிறப்பு தூய்மைப் பணி தொடங்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக மகா கும்பமேளா விழா முடிவடைந்ததும், அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்களின் சேவையை பாராட்டி உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அவர்களை கவுரவித்தார். மேலும் கும்பமேளா மைதானம் சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
சிறப்பு அதிகாரி அகன்ஷா ராணா தலைமையில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது. அடுத்த 15 நாட்களில் நதிக்கரையில் உள்ள படித்துறைகள், மகா கும்பமேளா மைதான சாலைகள், நிரந்தர மற்றும் தற்காலிக உள்கட்டமைப்புகள் சுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.