பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் இன்று நாடு திரும்பினர்.;

Update:2025-02-25 16:05 IST

அகமதாபாத்,

இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஜூலை 1, 2024 நிலவரப்படி, 209 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 51 மீனவர்கள் 2021 முதலிலும், 130 மீனவர்கள் 2022 முதலிலும், 9 மீனவர்கள் 2023 முதலிலும், 19 மீனவர்கள் 2024 முதலிலும் சிறையில் உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சி மாலிர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் இன்று குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் வந்தடைந்தனர்.

தண்டனை காலம் முடிந்த 22 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானின் கராச்சி மாலிர் சிறையில் இருந்து அதிகாரிகள் விடுவித்துள்ளதாகவும், அவர்கள் இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு திரும்பியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், அண்டை நாட்டு சிறைகளில் இன்னும் வாடும் பல இந்திய மீனவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறு விடுதலையடைந்த மீனவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட 22 மீனவர்களில் 18 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள், மூன்று பேர் அண்டை யூனியன் பிரதேசத்தில் உள்ள டையூவை சேர்ந்தவர்கள், ஒருவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்