நாட்டில் 3,104 தரமற்ற, 245 போலியான மருந்துகள் கண்டுபிடிப்பு; ஜே.பி. நட்டா தகவல்
நாட்டில் தரமற்ற, கலப்பட மருந்துகளின் உற்பத்தி, விற்பனை அல்லது விநியோகம் ஆகியவை தொடர்பாக 961 வழக்குகள் பதிவாகி உள்ளன.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில், போலி அல்லது கலப்பட மருந்துகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதார அமைச்சக மந்திரி ஜே.பி.நட்டா, கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2025-ம் ஆண்டு மார்ச் வரை பரிசோதிக்கப்பட்ட 1.16 லட்சம் மருந்து மாதிரிகளில், 3,104 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன. அதேநேரத்தில் 245 மாதிரிகள் போலியானவை அல்லது கலப்படம் செய்யப்பட்டவை என்று கண்டறியப்பட்டு உள்ளன என கூறினார்.
தொடர்ந்து அவர், தரமற்ற மற்றும் போலியான மருந்துகள் என அறிவிக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாநில ஆய்வகங்கள், மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலகங்களை மேம்படுத்துவது, புதிய மருந்து பரிசோதனை ஆய்வகங்களை அமைப்பது போன்ற மேம்பாட்டு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என கூறினார்.
இதுபோன்ற மருந்துகளின் உற்பத்தி, விற்பனை அல்லது விநியோகம் ஆகியவை தொடர்பாக 961 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதுபற்றி மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில், உற்பத்தி பிரிவுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கலப்படம் மற்றும் தரமற்ற மருந்து உற்பத்திக்கு எதிராக கடுமையான அபராதம், அனுமதி ரத்து உள்ளிட்டவற்றுடன் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டு உள்ளது.
இதுபோன்ற குறைந்த தரம் கொண்ட மருந்துகளுக்கு எதிராக தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதுடன், பாதுகாப்பான மற்றும் திறன் வாய்ந்த மருந்துகள் மக்களை சென்றடைவது உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்படுகிறது என்றும் நட்டா கூறினார்.