மனைவியின் கருவை கலைத்து விட்டு 2-வது திருமணத்திற்கு தயாரான காதல் கணவர்.. திருமண மண்டபத்தில் நடந்த பரபரப்பு
2-வது திருமணம் செய்ய முயன்ற காதல் கணவரின் திருமணத்தை இளம்பெண் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
ராய்ச்சூர்,
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் ரிஷப். இவர், பல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது, கொப்பல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஒரே கல்லூரியில் படித்ததால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. மேலும், இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, அவரை ரிஷப் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கல்லூரி படிப்பு முடிந்த பின்பு இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி ரிஷப்புக்கு அவர் தெரிவித்தார். இதையடுத்து, கர்ப்பத்தை கலைக்கும்படி இளம்பெண்ணிடம் ரிஷப் கூறியுள்ளார். அப்போது, தன்னை திருமணம் செய்யும்படி இளம்பெண் கூறியுள்ளார். ஆனால், கர்ப்பத்தை கலைத்தால் தான் திருமணம் செய்வதாக ரிஷப் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, இளம்பெண்ணும் கர்ப்பத்தை கலைத்தார்.
அதன்பிறகு, ராய்ச்சூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து இளம்பெண்ணை தாலி கட்டி ரிஷப் திருமணம் செய்துள்ளார். ஆனால், பெற்றோரிடம் சம்மதம் பெற்று வீட்டுக்கு அழைத்து செல்வதாக இளம்பெண்ணிடம் ரிஷப் கூறியுள்ளார். அதன்படி, இளம்பெண்ணும் தன்னுடைய வீட்டில் வசித்துள்ளார். கடந்த சில மாதங்களாக காதல் மனைவியுடன் பேசுவதை ரிஷப் நிறுத்தி விட்டார். ரிஷப்பை தொடர்பு கொள்ளவும் இளம்பெண்ணால் முடியவில்லை.
இதற்கிடையில், நேற்றுமுன்தினம் காதல் கணவர் ரிஷப்புக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நடப்பது பற்றி இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. அதாவது தனது திருமணம் தொடர்பான அழைப்பிதழை இன்ஸ்டாகிராமில் ரிஷப் வெளியிட்டு தனது நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதை பார்த்து அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனே கொப்பலில் இருந்து ராய்ச்சூருக்கு இளம்பெண் புறப்பட்டு வந்தார்.
பின்னர் ராய்ச்சூர் டவுனில் உள்ள திருமண மண்டபத்துக்கு இளம்பெண் சென்றார். அங்கு வேறு ஒரு பெண்ணை கரம் பிடிக்க தயாராக இருந்த ரிஷப்பிடம் சென்று இளம்பெண் தகராறு செய்தார். மேலும் தன்னை காதலித்துவிட்டு, கோவிலில் வைத்து திருமணம் செய்ததாகவும், தனது கர்ப்பத்தையும் ரிஷப் கலைத்ததாகவும் இளம்பெண் கூறினார்.
இதை கேட்டு திருமண மண்டபத்தில் இருந்த பெண் வீட்டார், ரிஷப் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ரிஷப்புக்கு நடக்க இருந்த 2-வது திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், நடந்த சம்பவங்கள் பற்றி ராய்ச்சூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் ரிஷப் மீது இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிஷப், இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.