அரியானா: வேன் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

அரியானாவில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-24 06:40 GMT

சண்டிகார்,

அரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 30 பேர் வேன் ஒன்றில் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரை செல்வதற்காக உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து புறப்பட்டனர். அந்த வேன் அம்பாலா-டெல்லி-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி ஒன்று வேன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 6 மாத குழந்தை உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியின் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்