பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்திய 77 வயது மூதாட்டி

விடாமுயற்சியுடன் தொடர்ந்து, பிளஸ்-2 தேர்வில் 77 வயது மூதாட்டி தேர்ச்சி பெற்று அசத்தினார்.;

Update:2025-09-12 01:31 IST

பாலக்காடு,

பாலக்காடு மாவட்டம் அலனல்லூர் அருகே பாண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (வயது 77). இவரது கணவர் ராமச்சந்திரன். அவர் இறந்து விட்டார். இவர்களது மகன்கள் சுரேஷ்பாபு, ஜெயபிரகாஷ், மகள் ஸ்ரீலதா. ஸ்ரீதேவி, கடந்த 1968-ம் ஆண்டு பையப்பரம்பு உயர்நிலைப் பள்ளியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதினார். இதில் 254 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். பின்னர் 19 வயதில் அவருக்கு திருமணமானது. இதனால் தனது படிப்பை நிறுத்தினார். இதையடுத்து அலனல்லூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பாரத்துறத் நாசர் கூறியதை அடுத்து, ஸ்ரீதேவிக்கு மீண்டும் படிக்க வேண்டும் என எண்ணம் தோன்றியது. அதுபற்றி அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அதற்கு மகன்கள், மருமகள்கள், பேரன்கள் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அலனல்லூர் ஊராட்சி சாக் ஷரதா மிஷன் மூலம் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்க ஸ்ரீதேவிக்கு வாய்ப்பு கிடைத்தது.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் அவர் தனித்தேர்வராக கலந்துகொண்டு தேர்வு எழுதினார். இதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் ஸ்ரீதேவி தேர்ச்சி பெற்று 1,200-க்கு 829 மதிப்பெண்கள் எடுத்தார். முதிர் வயதானாலும் ஆர்வமுடன் படித்து, தேர்ச்சி பெற்று உள்ளதால் மகிழ்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஸ்ரீதேவி கூறும்போது, மனம் இருந்தால் எந்த இலக்கையையும் அடையலாம் என்ற தன்னம்பிக்கையே இந்த வெற்றியின் பின்னால் உள்ளது. எனக்கு குடும்பத்தினரும், ஆசிரியர்களும் தந்த ஊக்கமே வெற்றிக்கு காரணம். மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் போது, வகுப்புகள் போக மீதமுள்ள நேரங்களில் வீட்டில் எனது மருமகள் மஞ்சிமா பாடம் கற்றுக்கொடுத்தார். குடும்பம் உள்பட பிற பிரச்சினைகளை கருத்தில் கொள்ளாமல், பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும், பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், படிப்பை தொடர முடியவில்லை என்றார். எஸ்.எஸ்.எல்.சி. படிப்பு முடிந்து 57 ஆண்டுகளுக்கு பிறகு மூதாட்டி ஒருவர் பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்