“எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்துகிறார்”.. விபரீத முடிவு எடுத்த வக்கீல்.. மாஜிஸ்திரேட்டு மீது வழக்குப்பதிவு

மாஜிஸ்திரேட்டு உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-08-23 13:43 IST

மும்பை,

பீட் மாவட்டம் வத்வானியில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அரசு வக்கீலாக பணியாற்றி வந்தவர் விநாயக் சண்டேல் (வயது47). கடந்த புதன்கிழமை காலை கோர்ட்டு வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக அங்கிருந்து தற்கொலை கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

அதில், “கோர்ட்டின் மாஜிஸ்திரேட்டு ரபீக் சேக் மற்றும் கோர்ட்டு எழுத்தர் டெய்டே ஆகியோர் தான் தனது தற்கொலைக்கு காரணம். மாஜிஸ்திரேட்டு என்னை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்துகிறார், என் பேச்சுக்கு செவிகொடுப்பதில்லை. இதேபோல் டெய்டேயும் அவருடன் சேர்ந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இதனால் தற்கொலை செய்வதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை” என குறிப்பிட்டு இருந்தார்.

இதனைதொடர்ந்து அரசு வக்கீல் விநாயக் சண்டேலின் மகன் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார், அதில், கடந்த ஜனவரி மாதம் முதல் வத்வானி கோர்ட்டில் அரசு வக்கீலாக பணியாற்றி வந்த எனது தந்தை கடந்த சில வாரங்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்,

இதுபற்றி கேட்டதற்கு சமீபத்தில் பொறுப்பேற்ற மாஜிஸ்திரேட் ரபீக் சேக் எந்த காரணமும் இல்லாமல் என்னை அவமானப்படுத்துவதாகவும் அவருடன் சேர்ந்து கொண்டு எழுத்தர் டெய்டேவும் அவதூறாக பேசுவதாகவும் குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்தார். எனவே மாஜிஸ்திரேட் ரபீக் சேக் மற்றும் எழுத்தர் டெய்டே மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த புகாரில் கூறியிருந்தார்.

இதன்பேரில் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக மாஜிஸ்திரேட்டு உள்பட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்