ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை

ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.;

Update:2025-07-13 09:19 IST

ஆமதாபாத்,

ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற ஒரே பயணி மட்டும் உயிர் பிழைத்தார். மீதமுள்ள பயணிகள், பணியாளர்கள் என 241 பேரும், மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்த 19 பேரும் உயிரிழந்தனர். இதனால் உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியாக விஸ்வாஸ் குமார் கருதப்பட்டார்.

ஆனால் அவருக்கு நிலைமை அப்படி இருக்கவில்லை. ஒட்டுமொத்த உலகையும் உலுக்கிய அந்த விபத்து நடந்து ஒரு மாதம் கடந்த பிறகும், அது ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவர் மீளவில்லை. தனது கண் முன்னே மிகப்பெரிய பயங்கரத்தை பார்த்ததும், தனது சகோதரரை விபத்தில் பறி கொடுத்ததும் அவரது மனதில் மிகப்பெரும் காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இங்கிலாந்து குடியுரிமை பெற்றவரான விஸ்வாஸ் குமாரை தினமும் அங்கிருந்து ஏராளமான உறவினர்கள் அழைத்து நலம் விசாரித்து வருகின்றனர். ஆனால் யாரிடமும் பேசாமல் மவுனமாகவே இருப்பதாக அவரது உறவினர் கூறியுள்ளார். நடு இரவில் திடீரென கண் விழிக்கும் அவர், அதன் பின்னர் தூங்க முடியாமல் தவிப்பதும், மிகுந்த பிரமையில் இருப்பதுமாக அவர் தெரிவித்தார்.

எனவே இந்த துயரில் இருந்து மீள்வதற்காக அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ள அவர், இதற்காக உளவியல் நிபுணர் ஒருவரை அணுகி இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போதுதான் சிகிச்சை தொடங்கியிருப்பதால் உடனடியாக இங்கிலாந்து திரும்பும் திட்டம் இல்லை என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்