வாலிபரை தாக்கிவிட்டு பொய் புகார் ; விமானப்படை அதிகாரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு

வாலிபரை தாக்கிவிட்டு பொய் புகார் அளித்த விவகாரத்தில் விமானப்படை அதிகாரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவாகி உள்ளது.;

Update:2025-04-22 20:05 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்தவர் விகாஷ்குமார் (வயது 27). இவர், பெங்களூருவில் தங்கி இருந்து கால்சென்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று காலையில் சி.வி.ராமன்நகர் பகுதியில் பைக்கில் வரும் போது, அதே சாலையில் சென்ற விமானப்படை அதிகாரியான சிலாத்தியா போஸ் கார் மீது மோதினார். இந்த விவகாரம் தொடர்பாக விகாஷ்குமார், சிலாத்தியா போஸ் இடையே வாக்குவாதம் உண்டானது. இதி விகாஷ்குமார் தன்னை தாக்கியதாக விமானப்படை அதிகாரி குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டார். தொடர்ந்து இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விகாஷ்குமாரை கைது செய்தார்கள்.

ஆனால் சிறிது நேரத்தில் சம்பவம் நடந்த இடத்தில் பதிவான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், விகாஷ்குமாரை விமானப்படை அதிகாரி சிலாத்தியா போஸ் தான் அடித்து தாக்குவது, மிதிப்பது, கழுத்தை நெரிப்பது, கையை கடித்து வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இதையடுத்து, விகாஷ்குமாரை தாக்கிவிட்டு பொய் புகார் அளித்ததுடன், கன்னடர்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறிய சிலாத்தியா போஸ் மீது பையப்பனஹள்ளி போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சிலாத்தியா போஸ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிலாத்தியா போஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் தயானந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்