மும்பை- லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி
விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. கடைசி நேரத்தில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் லண்டனுக்கு செல்ல இருந்த விமானம் ஆறு மணி நேரத்திற்கு மேலாக தாமதம் ஆனது.
கடைசி நேரத்தில் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால், 200-க்கும் மேற்பட்டோர் கடும் அவதி அடைந்தனர். இது தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மும்பையிலிருந்து லண்டனுக்கு காலை 6.30 மணிக்கு புறப்படவிருந்த விமானம் தாமதமாகி இன்னும் புறப்படவில்லை. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விமானம் மதியம் 1 மணிக்கு புறப்படும். பயணிகளுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களில் சமீப காலமாக அடிக்கடி கோளாறு ஏற்பட்டு சேவை பாதிக்கப்படுவது பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.