கணவனுக்கு 20 தூக்க மாத்திரைகள்... கள்ளக்காதலனுடன் சேர்ந்து விடிய விடிய ஆபாச படம் பார்த்த பெண்
கணவர் இல்லாததால் லட்சுமி மாதுரி கோபியை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்து வந்தார்.;
திருப்பதி,
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் சிலுவூரை சேர்ந்தவர் சிவ நாகராஜு (வயது 45). வெங்காய வியாபாரி. இவரது மனைவி லட்சுமி மாதுரி (வயது 37). தம்பதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். லட்சுமி மாதுரி விஜயவாடாவில் உள்ள சினிமா தியேட்டர் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை செய்து வந்தார்.
சட்டென பள்ளியை சேர்ந்தவர் கோபி (வயது 35). இவர் ஐதராபாத்தில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். சினிமா டிக்கெட் கவுண்டரில் வேலை செய்யும் போது கோபியுடன், லட்சுமி மாதுரிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
தனது கணவரின் வெங்காய வியாபாரத்தை கேவலமாக நினைத்து தொழிலை கைவிடச் செய்தார். பின்னர் கணவரை ஐதராபாத்திற்கு டிரைவர் வேலைக்கு அனுப்பினார். கணவர் இல்லாததால் லட்சுமி மாதுரி கோபியை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்து வந்தார். ஐதராபாத்தில் கார் ஓட்டிக்கொண்டு இருந்த நாகராஜு அந்த வேலை பிடிக்காததால் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் சொந்த ஊருக்கு வந்தார்.
கணவர் வீட்டிற்கு வந்ததால் லட்சுமி மாதுரி அவரிடம் ஏன் வெளியூரில் கார் ஓட்டுவதை விட்டு இங்கு வந்து விட்டீர்கள் என அடிக்கடி தகராறு செய்தார். கணவர் வீட்டில் இருந்தபடியே வெங்காய வியாபாரம் செய்து வந்ததால் கள்ளக்காதலுக்கு இடையூறாக மாறியது. தடையில் இருந்து விடுபட கணவரை கொலை செய்ய முடிவு செய்தார். சம்பவத்தன்று இரவு லட்சுமி மாதுரி பிரியாணி தயார் செய்தார். பிரியாணியில் 20 தூக்க மாத்திரைகளை கலந்து கணவருக்கு சிரித்து சிரித்து பேசியப்படி ஆசையாக பரிமாறினார். நாகராஜு பிரியாணியை சாப்பிட்டு மகிழ்ந்தார். தூக்க மாத்திரை கலந்த பிரியாணியை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சிவ நாகராஜு தூங்கிவிட்டார்.
லட்சுமி மாதுரி இரவு 11.30 மணி அளவில் கோபிக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் நாகராஜுவின் மார்பில் கோபி, உட்கார்ந்து கொண்டு கைகளை கெட்டியாக பிடித்து கொண்டார்.'
அப்போது லட்சுமி மாதுரி தலையணையால் கணவரின் முகத்தில் வைத்து அமுக்கினார். இதில் சிவ நாகராஜு துடி துடித்து பரிதாபமாக இறந்தார். கணவர் இறந்த பிறகு லட்சுமி மாதுரி இரவு முழு வதும் தூங்கவில்லையாம். அவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது செல்போனில் ஆபாச வீடியோ படங்களை விடிய விடிய பார்த்து பார்த்து ரசித்துள்ளார்.பின்னர் கோபி அங்கிருந்து தப்பி சென்றார். அதிகாலை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு போன் செய்து கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த நாகராஜுவின் நண்பர்கள் 30 நிமிடத்தில் இறுதி சடங்கு செய்ய முன்வந்தனர். அப்போது நாகராஜுவின் காதில் இருந்து ரத்தம் வழிந்தபடி இருந்தது. மேலும் நாகராஜுவின் மார்பு எலும்புகள் உடைந்து உடைந்து காணப் பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த நாகராஜுவின் தந்தை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நாகராஜுவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் நாகராஜு மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லட்சுமி மாதுரியை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அவருடைய செல்போனை பரிசோதித்த போது கடைசியாக கள்ளக்காதலனுடன் பேசியது தெரியவந்தது. மேலும் அவர் விடிய விடிய ஆபாச படங்களை பார்த்ததையும் போலீசார் கண்டு பிடித்தனர்.
கிடுக்கிப்பிடி விசாரணையில் லட்சுமி மாதுரி கள்ளக்காதலன் கோபியுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது அம்பலமாகியது. போலீசார் லட்சுமி மாதுரி மற்றும் அவரது கள்ளக்காதலன் கோபி ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் குண்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.