அசாம், அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
அசாம், அருணாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.0, 5.0 அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
அருணாச்சல பிரதேசம் சாங்லாங் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.13 மணியளவில் ரிக்டர் அளவில் 5.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 110 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.45 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 96.86 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து, அசாமின் மேற்கு கர்பி ஆங்லாங் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 5.30 மணிக்கு ரிக்டர் 3 அளவில் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. முன்னதாக, லே லடாக் பகுதியில் ரிக்டர் 3.4 அளவில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.