பிறந்த நாள் பரிசால் தகராறு: மனைவி - மாமியாரை கொலை செய்த நபர் கைது
பிறந்தநாள் விழாவை கொண்டாடிய போது பரிசுப் பொருட்களை பரிமாறுவதில் கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
புதுடெல்லி ரோகிணி செக்டார்-17 பகுதியில் குடியிருப்பவர் யோகேஷ். இவரது மனைவி பிரியா சேகல் (34). இவர்களுக்கு திருமணம் ஆனது 17 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 28-ந்தேதி இந்த தம்பதியின் மகனுக்கு பிறந்த நாள். அப்போது மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக குசும் சின்ஹா (63) தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார்.
பிறந்தநாள் விழாவை கொண்டாடிய போது பரிசுப் பொருட்களை பரிமாறுவதில் யோகேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மகளையும், மருமகனையும் குசும் சின்ஹா சமாதானப்படுத்தினார். ஆனால் சமாதானம் ஆகவில்லை.
இதையடுத்து குசும் சின்ஹா தனது வீட்டுக்கு போன் செய்து விவரத்தை சொல்லி, ஒரு நாள் தங்கியிருந்து அவர்களை சமாதானப்படுத்தி விட்டு வருவதாக கூறினார். ஆனால் இரவிலும் அவர்களுக்குள் சண்டை நீடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த யோகேஷ் தனது மனைவி பிரியா சேகலை கத்தரிக்கோலால் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பிரியா அங்கேயே இறந்தார். அதை பார்த்து மருமகளை தாக்க முயன்ற மாமியார் குசும் சின்ஹாவையும் சரமாரியாக குத்திக்கொன்றார். பின்னர் தனது மகனையும் அழைத்துக் கொண்டு வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியேறினார்.
மறுநாள் பகலில் குசும் சின்ஹாவின் மகனும், மற்றொரு மகளும் பலமுறை போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. இதனால் பதற்றமடைந்து யோகேஷ் வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததையும், வாசலில் ரத்தக் கறைகள் இருந்ததையும் பார்த்து ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, யோகேஷின் மனைவி பிரியா சேகல் மற்றும் மாமியார் குசும் சின்ஹா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து யோகேஷை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தரிக்கோல் மற்றும் ரத்தக்கறை படிந்த ஆடைகளையும் போலீசார் கைப்பற்றினர்.