பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: 5 காவல்துறை உயர் அதிகாரிகளின் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்
சஸ்பெண்ட் உத்தரவு திரும்ப பெறப்பட்டு, 5 பேரும் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.;
பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் ஆனதால், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜூன் 4-ந்தேதி வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முன்பு திரண்டனர்.
இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 காவல்துறை உயர் அதிகாரிகளின் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதன்படி பெங்களூரு கமிஷனர் தயானந்தா, கூடுதல் கமிஷனர் விகாஷ் குமார், துணை கமிஷனர் சேகர் தெக்கன்னவர், துணை எஸ்.பி. பாலகிருஷ்ணா மற்றும் இன்ஸ்பெக்டர் கிரீஷ் ஆகியோரின் சஸ்பெண்ட் உத்தரவு திரும்ப பெறப்பட்டு, 5 பேரும் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜான் மைக்கேல் டிகுன்ஹா தலைமையிலான நீதித்துறை ஆணையமும், மாவட்ட நீதிபதி ஜெகதீஷ் தலைமையிலான மாஜிஸ்திரேட் குழுவும் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையை முடித்து, ஜூலை 10 மற்றும் ஜூலை 11 அன்று தங்கள் அறிக்கைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததால், அதிகாரிகள் தங்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி மனுக்களையும் சமர்ப்பித்தனர். மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகளின் இடைநீக்க உத்தரவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.