பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி... என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி பிரமாண்ட இரவு விருந்து

இதற்கு முன்பு நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதே இரவு விருந்து நடத்துவது என திட்டமிடப்பட்டிருந்தது.;

Update:2025-12-11 21:59 IST

புதுடெல்லி,

பீகார் சட்டசபை தேர்தலின்போது, நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. போட்டியிட்டது. இதனை முன்னிட்டு, நடப்பாண்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்றன. அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. எனினும், எஸ்.ஐ.ஆர். பணிகள் நடந்து தேர்தலும் முடிந்து, பீகாரில் என்.டி.ஏ. கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. அந்த கூட்டணி ஆட்சியை மீண்டும் பிடித்தது.

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற பின்னர், பிரதமர் மோடி புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கூட்டணியை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று இரவு விருந்து அளிக்கிறார்.

இதற்கு முன்பு நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதே இரவு விருந்து நடத்துவது என திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பஞ்சாப்பில் ஏற்பட்ட வெள்ளம் எதிரொலியாக அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இரவு விருந்திற்காக 54 மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் பா.ஜ.க. எம்.பி.க்களுடன் பல்வேறு கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் என எட்டு பேர் இருப்பார்கள். ஒரு மேஜைக்கு குறைந்தது ஒரு மத்திய மந்திரி அமர்ந்திருப்பார். இரவு உணவின் போது ஒவ்வொரு மேஜையிலும் அமர்ந்திருக்கும் எம்.பி.க்களுடன் பிரதமர் உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்