அருணாசல பிரதேசம்: விபத்தில் 18 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு

அருணாசல பிரதேசத்திற்கு விடுதி கட்டுவதற்கான பணிக்காக அவர்கள் சென்றுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.;

Update:2025-12-11 21:17 IST

புதுடெல்லி,

அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் இருந்து சிலரை ஏற்றி கொண்டு லாரி ஒன்று அருணாசல பிரதேசம் நோக்கி சென்றது. அப்போது, இன்று காலை அருணாசல பிரதேசத்தின் கிழக்கு பகுதியின் அஞ்சாவ் மாவட்டத்தில் லாரி வந்தபோது, ஆயிரம் அடி ஆழம் கொண்ட பள்ளம் ஒன்றில் திடீரென கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கி லாரியில் இருந்த 18 பேர் பலியானார்கள். 3 பேர் காணாமல் போனார்கள். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. 18 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார் என தின்சுகியா மாவட்ட ஆணையாளர் ஸ்வப்னீல் பால் கூறினார்.

மொத்தம் 22 தொழிலாளர்கள் பயணித்த இந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததற்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை. அவர்களின் மறைவுக்கு அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். விடுதி ஒன்றை கட்டுவதற்கான பணிக்காக அவர்கள் அருணாசல பிரதேசத்திற்கு சென்றுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

இந்த விபத்து செய்திக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், நிவாரணமும் அறிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், அருணாசல பிரதேசத்தின் கிழக்கு பகுதியின் அஞ்சாவ் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களால் வேதனை அடைந்தேன். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறேன்.

பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்