அருணாசலபிரதேசத்தில் 1,000 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
அருணாசலபிரதேசத்தில் ஏற்பட்ட இந்த கோர விபத்தில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.;
இட்டாநகர்,
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் கில்லாபுக்ரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 22 பேர் ஒரு லாரியில் அருணாசலபிரதேச மாநிலம் அஞ்சாவ் மாவட்டம் ஹயுலியாங்கில் ஒரு விடுதி கட்டுமான பணிக்காக சென்றனர். தொழிலாளர்கள் கடந்த 10-ந் தேதிக்குள் ஹயுலியாங் சென்று இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வர தவறியதால் அவர்களை காணவில்லை என அவர்களது கூட்டாளிகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காணாமல் போன தொழிலாளர்களை கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையின் போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த புத்தேஸ்வர் தீப் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் லாரியில் வந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதை தொடர்ந்து ராணுவம், போலீசார், மாநிலம் பேரிடர் மீட்பு படையினர் ஹயுலியாங்- சக்லகம் சாலையின குறுகிய மலைப்பாதையில் ஓரிடத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து கிடநததை கண்டறிந்து அங்கு சென்றனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு மீட்பு படையினர் விபத்தில் சிக்கிய தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். லாரியில் சென்ற 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 19 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. உயிரிழந்த 21 தொழிலாளர்களில் 18 பேர் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள்.
விபத்தில் லாரியில் இருந்த புத்தேஸ்வர் தீப் மட்டும் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பி உள்ளார். பின்னர் அவர் தட்டுத்தடுமாறி ஹயுலியாங் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உள்ளார். காயமடைந்த புத்தேஸ்வர் தீப் கூறும்போது, ‘‘நெட்வொர்க் இல்லாததாலும், செல்போனின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், என்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை’’ என கூறினார்.
தொழிலாளர்கள் இருந்த லாரி அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள சீன எல்லையை நோக்கி ஹயுலியாங்- சக்லகம் சாலையின் குறுகிய மலைப்பாதையில் சென்ற போது நிலைதடுமாறி சாலையோரம் உள்ள 1,000 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரி சுக்குநூறாக நொறுங்கியது. அதில் இருந்த தொழிலாளர்கள் உயிர் இழந்தனர் என தெரியவந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.