சாக்கு மூட்டையில் பெண் சடலம் கண்டெடுப்பு - புதுச்சேரியில் பரபரப்பு
ஐயப்பன் என்ற நபர் தமிழ்ச்செல்வியின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்துள்ளார்.;
புதுச்சேரி,
புதுச்சேரி உருவையாறு மேம்பாலம் அருகே சாக்கு மூட்டையில் ஒரு பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் பெயர் தமிழ்ச்செல்வி(வயது 45) என்பதும், அவர் பழைய தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தமிழ்ச்செல்விக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். மேலும், தமிழ்ச்செல்வி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்துள்ளார்.
தமிழ்ச்செல்வி தனது மகளை தினமும் பள்ளிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி கடந்த 5-ந்தேதி தனது மகளை பள்ளிக்கு அழைத்து சென்ற தமிழ்ச்செல்வி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து தமிழ்ச்செல்வியின் தம்பி மதன்ராஜ் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியபோது, தமிழ்ச்செல்வியின் மொபைல் எண்ணில் இருந்து ஒதியம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கு கடைசியாக அழைப்பு சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஐயப்பனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முன்னதாக ஐயப்பனிடம் நட்பாக பழகி வந்த தமிழ்ச்செல்வி, அவரிடம் பணம் பெற்றுள்ளார். அதை ஐயப்பன் திருப்பி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 5-ந்தேதி மகளை பள்ளியில் விட்ட பிறகு ஐயப்பனை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு தமிழ்ச்செல்வி சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஐயப்பன் தமிழ்ச்செல்வியின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்துள்ளார். பின்னர் தமிழ்ச்செல்வியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி உருவையாறு மேம்பாலம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில், தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், ஐயப்பனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.