பெண் பயணியின் கன்னத்தில் அறைந்த 'பைக் டாக்சி' ஓட்டுனர் - வீடியோ வைரல்
பைக் டாக்சியை சுகாஷ் என்பவர் ஓட்டினார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெயநகரை சேர்ந்தவர் ஸ்ரேயா. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 13-ந் தேதி ஸ்ரேயா அலுவலகத்துக்கு செல்வதற்காக பைக் டாக்சியில் முன்பதிவு செய்து பயணித்தார். இந்த பைக் டாக்சியை சுகாஷ் என்பவர் ஓட்டினார். அப்போது சுகாஷ் வேகமாக பைக் டாக்சியை ஓட்டினார்.
மேலும் சிக்னலில் நிற்கவில்லை. குறுகிய பாதை என்று கூறி, வேறு பாதையில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஸ்ரேயா, சுகாஷிடம் கேள்வி எழுப்பினார். அதாவது ஏன் வேகமாக செல்கிறீர்கள். மெதுவாக செல்ல வேண்டியது தானே என்று கேட்டுள்ளார்.
அதற்கு சுகாஷ் எனக்கு எப்படி வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று தெரியும். 5 ஆண்டுகளாக நான் பைக் டாக்சி ஓட்டி வருகிறேன் என்று கூறினார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் சுகாஷ், ஸ்ரேயாவின் கன்னத்தில் ஓங்கி பளார் என அறைந்தார். இதில் நிலை தடுமாறிய ஸ்ரேயா கீழே விழுந்தார்.இதை அப்பகுதியில் இருந்த சிலர் செல்போனில், படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் இதுகுறித்து ஸ்ரேயா, ஜெயநகர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ஸ்ரேயா, பைக் டாக்சி ஓட்டுனர் ஆகியோரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். விசாரணையில் ஸ்ரேயாவை, சுகாஷ் தாக்கியது உறுதியானது. இதையடுத்து சுகாஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.