தங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை கேக் வெட்டும் கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்

பிறந்தநாள் விழாவின்போது கேக் வெட்டுவதற்காக பயன்படுத்திய பட்டாக்கத்தியை கொலைக்கு பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.;

Update:2025-08-24 17:56 IST

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக் டிங்கா(வயது 21). இவரது தங்கையிடம் அதே பகுதியை சேர்ந்த அணில் என்பவர் நீண்ட நாட்களாக பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய அணில், அவருக்கு பாலியல் ரீதியாத தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பெண் தனது அண்ணனிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அபிஷேக் டிங்கா, தனது நண்பர்களுடன் சேர்ந்து அணிலை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக ஆன்லைனில் சில கத்திகளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். தொடர்ந்து அணிலின் தினசரி நடவடிக்கைகளை அபிஷேக் கண்காணித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அணில் தனியாக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அபிஷேக்கும் அவரது நண்பர்களும் சேர்ந்து அணிலை சுற்றி வளைத்து சரசாரியாக தாக்கினர். பின்னர் அபிஷேக் தன்னிடம் இருந்த கத்தியால் அணிலை குத்திக் கொலை செய்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அபிஷேக்கை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது தங்கை பிறந்தநாள் விழாவின்போது கேக் வெட்டுவதற்காக பயன்படுத்திய பட்டாக்கத்தியைக் கொண்டு அணிலை குத்திக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்